

‘‘மூன்றாம் பாலினத்தவர்களை யாரும் கஷ்டப்படுத்த வேண்டாம். அவர்களும் மனிதர்களே,’’ என சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிபதி எம்.சுமதி சாய்பிரியா தெரிவித்தார்.
சிவகங்கை நீதிமன்ற வளாகத்தில் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு அனைத்துத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த திட்டங்கள் தொடர்பான அரங்குகளை திறந்து வைத்து அவர் பேசியதாவது: மாணவர்கள் கல்வித் தகுதி, பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டு பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்ய வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களை அனைவரும் மதிக்க வேண்டும்.
கழிவறைகளில் கூட மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இல்லை. அவர்களை யாரும் கஷ்டப்படுத்தாதீர். அவர்களும் மனிதர்களே. பாலியல் குற்றங்கள், குழந்தைகளை கடத்தி கொத்தடிமையாக பயன்படுத்துவதை தடுக்க நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மொபைல்களை தீய வழிக்கு பயன்படுத்தாமல், நல்ல தகவல்களை பெற மட்டுமே பயன்படுத்த வேண்டும், என்றார்.
தொடர்ந்து பெண்கள், குழந்தைகளுக்கான நடமாடும் சட்ட ஆலோசனை வாகனத்தை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பரமேஸ்வரி, லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உதயவேலன், கூடுதல் எஸ்பி வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.