Published : 02 Nov 2021 03:10 AM
Last Updated : 02 Nov 2021 03:10 AM

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் - 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு : மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 683 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் 1,75,116 மாணவர்கள்தங்கள் கல்வியை ஒன்றரை வருடங்களுக்குப் பின் தொடங்கியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஒலி முகமதுபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் கீழம்பி ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவற்றுக்கு வந்த மாணவர்களைமாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி பூங்கொத்து கொடுத்துவரவேற்றார்.

பல்வேறு இடங்களில் அமைச்சர்கள், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் மாணவர்களை வரவேற்று உற்சாகப்படுத்தினர். இந்தநிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 1,072 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. 2 லட்சத்து 52 ஆயிரம்மாணவ, மாணவிகள் பள்ளிக்குவந்தனர். காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் பலூன், இனிப்புகள் மற்றும் எழுது பொருட்களை வழங்கி மாணவ, மாணவிகளை வரவேற்றார்.

திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ பாலாஜி, ஊராட்சி ஒன்றிய தலைவர் இதயவர்மன் ஆகியோர் பள்ளி மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். இதேபோல், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் புதுப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செய்யூர் எம்எல்ஏ பாபு,ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தனபால் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு முகக்கவசம் வழங்கி வரவேற்பு அளித்தனர். வாயலூரை அடுத்த உய்யாலிக்குப்பம் நடுநிலைப் பள்ளியில் சமூக ஆர்வலர் கிங் உசேன் தலைமையில், கிராம மக்கள் பூங்கொத்து வழங்கி பள்ளி மாணவர்களை வரவேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கீழ் உள்ள திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் 1,207 அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகள், 508மெட்ரிகுலேஷன், நர்சரி பள்ளிகள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை நேற்று இயங்கத் தொடங்கின.

இந்த வகுப்புகளில் படிக்கும் சுமார் 1.36 லட்சம் மாணவ - மாணவிகளில் சுமார் 85 சதவீதத்தினர் நேற்றுபள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள் மலர்கள், இனிப்புகள் அளித்து வரவேற்றனர்.

குறிப்பாக, ஆவடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மலர்கள், இனிப்புகள் அளித்து மாணவர்களை வரவேற்று, அவர்களுடன் கலந்துரையாடினார். கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிமாணவ - மாணவிகள் மேள தாளங்கள் முழங்க, சிவப்பு கம்பளம்விரித்து, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். அவர்களுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் இனிப்புகள் அளித்தார்.

மூன்று மாவட்டங்களிலும் உடல்வெப்ப பரிசோதனை செய்த பிறகேமாணவர்கள் பள்ளிக்கு உள்ளேஅனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டனர். கை கழுவும் திரவம் கொண்டு கைகளை சுத்தம் செய்தே பிறகே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x