தகுதிச்சான்றிதழ் பெறாத பள்ளி வாகனங்களை இயக்கினால் பறிமுதல் :  வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை

தகுதிச்சான்றிதழ் பெறாத பள்ளி வாகனங்களை இயக்கினால் பறிமுதல் : வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை

Published on

உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி பார்வையிட்டார். தனியார் பள்ளி வாகனங்களில் தீயணைப்புக் கருவிகள், அவசரகால வழி, முதலுதவி பெட்டிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவிகள், குழந்தைகள் ஏறும் வகையில் படிக்கட்டுகளின் உயரம், மேற்கூரை, இருக்கைகள் உட்பட 21 வகையான அரசு விதிமுறைகள் சரியாக உள்ளதா? என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர்குலோத்துங்கன் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளின் பொறுப்பில் 286 வாகனங்கள் உள்ளன. இதில் 166 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆய்வில் குறைகள் கண்டறியப் பட்டால், நோட்டீஸ் வழங்கி குறைகளை சரிசெய்ய அறிவுறுத்தப்படுகிறது. மலைப்பாதையில் பள்ளி வாகனங்களை இயக்குவது குறித்து ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 40 கிலோ மீட்டர் வேகத்துக்குள் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். ஆட்டோக்களில் அதிக குழந்தைகளை ஏற்றிச்சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தகுதிச்சான்றிதழ் பெறாத வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in