Published : 31 Oct 2021 03:12 AM
Last Updated : 31 Oct 2021 03:12 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் - தனியார் பள்ளிகளின் பேருந்துகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு :

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து தகுதிச்சான்று அளிப்பதற்கான ஆய்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டியன் (வேலூர்), பாஸ்கர பாண்டியன் (ராணிப்பேட்டை) ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் படிப்படியாக திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (நவ.1) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி மாவட்ட அளவில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தனியார் பள்ளி பேருந்துகளின் பாதுகாப்பு உறுதித்திறன் குறித்த ஆய்வு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில், பேருந்துகளில் மாணவர்கள் ஏறுவதற்கு வசதியானபடிக்கட்டு, முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள், வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தியிருப்பது உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறதா? என ஆய்வு நடைபெற்று வருகிறது.

வேலூர் மாவட்டம்

வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

அதேபோல், குடியாத்தம் வட்டார பகுதிகளுக்கான பேருந்துகளின் ஆய்வு குடியாத்தத்தில்நடைபெற்றன. வேலூரில் மொத்தம் 106 பள்ளிகளின் 420 பேருந்துகளில் நேற்று 200 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. குடியாத்தத்தில் 40 பள்ளிகளின் 150 பேருந்துகள் என மொத்தம் 350 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 250 பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

வேலூரில் நடைபெற்ற ஆய்வை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டி யன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தனியார் பள்ளி பேருந்துகளில் அரசின் விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்த பிறகே அனுமதி அளிக்கப்படும். அனுமதி இல்லாத வாகனங்களை இயக்கக்கூடாது. அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் 300 தனியார் பள்ளி பேருந்துகள், அரக்கோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் 150 பேருந்துகள் என மொத்தம் 450 பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டையில் நடை பெற்ற முதற்கட்ட ஆய்வில் 105 பேருந்துகள் பங்கேற்றன. இதில், 80 பேருந்துகளுக்கு தகுதிச்சான்று வழங்கப்பட்டது. 25 பேருந்துகளில் இருக்கும் சிறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு எடுத்துவருமாறு அறிவுறுத்தப் பட்டது. அரக்கோணத்தில் தனியார் பேருந்துகளின் ஆய்வு இன்று நடைபெற உள்ளது.

ராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆய்வை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் பேருந்து ஓட்டுநர்களிடம் பேசும்போது, ‘‘ஓட்டுநர்கள் செல்போன் பேசிய படி பேருந்தை ஓட்டக்கூடாது. பிள்ளைகளை ஏற்றி, இறக்கும்போது பக்க வாட்டில் பார்த்து வாகனங்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும். உங்களை நம்பித்தான் பிள்ளைகளை பெற்றோர் அனுப்பி வைக்கின்றனர். அதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்’’ என்றார்,

இந்த ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், செங்கோட்டுவேல், போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகேஷ், கல்வி மாவட்ட அலுவலர் அங்குலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x