

திருப்பத்தூர் மாவட்ட மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கல்விக்கடன் கேட்டு அதிக மனுக்கள் வருவதால் வங்கிகள் சார்பில் கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து வங்கிகளுடன் இணைந்து முன்னோடி வங்கி சார்பில் வாடிக்கையாளர் தொடர்பு சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் 26 வங்கிகள் சார்பில் கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது. இதில், பல்வேறு திட்டங்களின் கீழ் 3,200 பேருக்கு ரூ.99.03 கோடி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கினார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவராஜ் (ஜோலார்பேட்டை), நல்லதம்பி (திருப்பத்தூர்), வில்வநாதன் (ஆம்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கிருஷ்ணராஜ் வரவேற்றார். இதில், பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கிய ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசும்போது, ‘‘புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுகிறது. மகளிர் குழுவினர், தாட்கோ கடன், நபார்டு மூலம் வேளாண் பணிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.
இதன்மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச்செல்ல நடவடிக்கைமேற்கொள்ளப் பட்டுள்ளது. அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்று சேர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு காலாண்டுக்கும் இதேபோன்று அனைத்து வங்கிகளின் சார்பில் மாபெரும் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் நடத்தப்பட வேண்டும்.
ஆம்பூர் அடுத்த நாயக்கநேரி, ஏலகிரி, புதூர்நாடு என 3 மலை கிராமங்களில் வாழ்கின்ற மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் வங்கிக்கிளைகள், நடமாடும் வங்கி சேவைகளை அமைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கல்லூரி மாணவர்கள் அதிகம் பேர் பங்கேற்று கல்விக்கடன் கோரி தொடர்ந்து மனுக்கள் அளிக்கின்றனர்.
எனவே, வரும் வெள்ளிக்கிழமை கல்விக்கடன் வழங்க சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும். முகாம் நடைபெறுவதற்கு 2 நாட்கள் முன்பே அதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டு என்னென்ன ஆவணங்கள் எடுத்துவர வேண்டும் என்றும் தெரிவிக்க வேண்டும். முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கடன் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும் தொழில் கடன் வழங்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும்’’ என்றார்.