நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு :

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆயத்தப் பணிகள்  குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நேற்று நடந்தது. இதில்  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேசினார். உடன் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகர காவல் ஆணையர் நஜ்முல்  ஹோடா உள்ளிட்டோர் உள்ளனர். படம்: எஸ்.குரு பிரசாத்.
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேசினார். உடன் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா உள்ளிட்டோர் உள்ளனர். படம்: எஸ்.குரு பிரசாத்.
Updated on
1 min read

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான ஆயத்தப் பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேசியதாவது:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை 4 மாதங்களில் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் அலுவலர்கள் தேர்தல் ஆணையத்தின் புதிய தகவல்களை அறிந்துகொள்ளுதல், திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல் மற்றும் மேம்படுத்திக் கொள்வது பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

மாநில தேர்தல் நடத்தும் அலுவலர்களாக பேரூராட்சிகளுக்கு ஆணையாளரும், நகராட்சிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர்களும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மாவட்ட ஆட்சியர்களும் செயல்படுவர்.

தேர்தல் அறிவிப்புகள், வேட்பு மனு தாக்கல், பரிசீலனை, முகவர்கள் நியமனம், தேர்தல் செலவினங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களித்தல், வாக்கு எண்ணுதல் உள்ளிட்டவை குறித்து 11 பாகங்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து 9 கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் நியாயமான முறையில் வாக்களிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளதால் மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் விதிமுறைகள் குறித்து தீவிர பயிற்சிகளை இவர்களுக்கு வழங்க வேண்டும்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. அதேபோன்று தற்போது நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. குறிப்பாக, நீதிமன்றங்கள் வழங்கிவரும் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் கார்மேகம் (சேலம்), திவ்யதர்சினி (தருமபுரி), ஜெயசந்திர பானுரெட்டி (கிருஷ்ணகிரி), ஸ்ரேயா சிங் (நாமக்கல்), பிரபுசங்கர் (கரூர்), அமர்குஷ்வாஹா (திருப்பத்தூர்),  தர் (கள்ளக்குறிச்சி), சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா, எஸ்பி  அபிநவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in