

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் ஆட்டுச்சந்தையில் எதிர்பார்த்த விற்பனை இல்லாததால் ஆடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அய்யலூரில் பிரசித்திபெற்ற ஆட்டுச்சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடப்பது வழக்கம். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நேற்று நடந்த சந்தையில் ஆடு வளர்ப்போரும் விவசாயிகளும் அதிக எண்ணிக் கையில் ஆடுகளைக் கொண்டு வந்திருந்தனர்.
வழக்கமாக தீபாவளிக்கு 2 நாள், 3 நாட்களுக்கு முன்னதாக வியாழக்கிழமை சந்தை நடக்கும். இந்த முறை தீபாவளி வியாழக்கிழமை வருகிறது. அதனால், அதற்கு ஒரு வாரம் முன்பாக நேற்று சந்தை நடந்தது. முன்கூட்டியே தீபாவளிக்குத் தேவையான ஆடுகளை வாங்கி, அதை தீபாவளி வரை பராமரிப்பது சிரமம் என்பதால் வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் ஆடுகளை வாங்குவதை தவிர்த்தனர்.
இதனால் வழக்கமாக இறைச்சிக் கடைக்குத் தேவையான ஆடுகளை மட்டுமே வாங்கிச் சென்றனர். இதனால் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடுகள் தேக்கமடைந்தன.
10 கிலோ எடையுள்ள ஆடு 7,000 ரூபாய் வரை விற்கும் என எதிர்பார்த்த நிலையில், வியாபாரிகள் 4,000 ரூபாய்க்கு கேட்டதால், அவற்றை விற்காமல் கால்நடை வளர்ப்போர் திருப்பிக் கொண்டு சென்றுவிட்டனர்.
வழக்கமாக தீபாவளிக்கு முன்பு நடக்கும் சந்தையில் ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஆண்டு அந்த அளவுக்கு விற்பனையாகாததால் ஆடு வளர்ப்போர் ஏமாற்றமடைந்தனர்.
நேற்று நடந்த சந்தையில் ஆடுகள் விற்பனை குறைவாக இருந்ததால் தீபாவளிக்கு முன்னதாக நவ.2-ல் (செவ்வாய்க் கிழமை) சிறப்புச் சந்தை நடத்த அய்யலூர் பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.