Published : 29 Oct 2021 03:12 AM
Last Updated : 29 Oct 2021 03:12 AM

கீழ்பவானி, தடப்பள்ளி பாசனப்பகுதிகளில் - வளமான நெல் நாற்றுகளை வளர்க்க விவசாயிகளுக்கு ஆலோசனை :

கீழ்பவானி மற்றும் தடப்பள்ளி பாசனப் பகுதிகளில் நெல் சாகுபடிக்கான வளமான நெல் நாற்றுக்களை வளர்ப்பதற்கான வழிமுறைகளை வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குநர் வே.ஜீவதயாளன் கூறியதாவது;

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி மற்றும் தடப்பள்ளி பாசனப்பகுதிகளில் நெல் சாகுபடிக்காக நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் உழவுப்பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

நெல்லில் நல்ல மகசூல் பெறுவதற்கு திடமான, வாளிப்பான, நோயற்ற நாற்றுகளை உருவாக்குவது அவசியமாகும்.

நாற்றங்கால் தயாரிப்பு

ஒரு ஏக்கருக்கான நாற்றங்காலுக்கு தொழு உரம் அல்லது கம்போஸ்ட் 2 டன் அல்லது பசுந்தாள் உரம் 400 கிலோ இட வேண்டும். கடைசி உழவின்போது ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு இரண்டு கிலோ டி.ஏ.பி. உரம் இடவேண்டும். டி.ஏ.பி அடி உரமாக இடப்படாவிட்டால், நாற்று விட்டு 15 நாட்கள் வரையும் இடலாம்.

நாற்றங்காலில் பாசி படர்வதைத் தடுக்க 8 சென்ட் நாற்றங்காலுக்கு 100 கிராம் ‘மயில்துத்தம்' இடலாம்.

விதைத்த மூன்று நாட்களுக்கு வயலில் ஒரு அங்குலம் தண்ணீர் நிறுத்த வேண்டும். வயல் காய்ந்து வெடித்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

களிமண் அல்லது இறுக்கமான மண்ணில் நாற்று விடப்பட்டிருந்தால் நாற்றுப் பறிக்கும்போது வேர்கள் அறுந்து விடும்.

இதைத் தவிர்க்க ஒரு சென்ட்டுக்கு ஒரு கிலோ என்ற அளவில் ஜிப்சத்தை இட்டு ஒரு நாள் தண்ணீரை நிறுத்தி அதன்பின்பு நாற்றுகளைப் பறிக்கலாம்.

நாற்றங்காலின் ஒரு மூலையில் சிறிய பாத்தி ஒன்றை அமைத்து அதில் பாதி உயரத்திற்கு நீர் நிரப்ப வேண்டும். ‘அசோஸ்பைரில்லம்’ ‘பாஸ்போபேக்டர்’ உயிர் உர பொட்டலங்களை (தலா - 2) பிரித்து தண்ணீரில் நன்கு கலந்து, நாற்றுகளை அதில் அரைமணிநேரம் நனைத்த பின்பு நடுவதால் காற்றிலுள்ள தழைச்சத்து பயிருக்கு கிடைக்கிறது. மணிச்சத்தும் கூடுதலாகக் கிடைக்கிறது.

நாற்றின் வயது

செம்மை நெல் சாகுபடியில் (ஒற்றை நெல் நாற்று முறை) 10 நாள் முதல் 17 நாள் வயதான நாற்றுகள் நடப்படுகின்றன. இயந்திர நெல் நடவின்போது 20 முதல் 25 நாள் வயதான நாற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.

அதிக ஆழத்தில் நடவு வயலில் நாற்றுகளை நடுவதால் தூர் வெடிப்பது 10 நாட்களுக்கும் மேல் அதிகமாகிறது. மேலாக நடவு செய்வதால் விரைவில் முதல்நிலை தூர் உருவாகி புதிய தூர்கள் வெடித்து, பயிர் பச்சை கட்டி வளரும், எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x