

திருப்பத்தூர் மாவட்டத்தில் 421 மையங்களில் நாளை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள், 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 380 நடமாடும் குழுவினர் மூலம் நாளை (30-ம் தேதி) கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் முகாம்களில் அனைத்துத்தரப்பு மக்களும் முகாமில் பங்கேற்று தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 5 லட்சத்து 34 ஆயிரம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 1.96 லட்சம் பேரும் என மொத்தம் 7.19 லட்சம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். மாவட்ட மக்கள் தொகையில் 57 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 சதவீதம் பொது மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண் டும்’’ என்று தெரிவித்துள்ளார்.