Published : 28 Oct 2021 03:09 AM
Last Updated : 28 Oct 2021 03:09 AM
திருப்பத்தூரில் வங்கி சேவைகள் தொடர்பான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் 9 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், 15 தனியார் வங்கிகள், ஒரு கிராமிய வங்கி, ஒரு மத்திய கூட்டுறவு வங்கி என மொத்தம் 26 வங்கிகள், 191 கிளைகளுடன் செயல்படுகிறது. வங்கித்துறையில் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு வரும் நவீன மயமாக்கப்பட்ட சேவைகள் குறித்தும், வங்கிகளின் வாடிக்கை யாளர்களுக்கு தேவையான வங்கி பரிவர்த்தனை, கடன் பற்றிய விவரங்கள், மின்னனு செயலிகள் மூலம் பணப்பரிமாற்றம் போன்ற பல சேவைகளை வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்தில் கூடி வங்கி சேவைகள் குறித்து தெரிவிக்க திருப்பத்தூரில் ‘வங்கி வாடிக்கையாளர்களின் தொடர்பு முகாம்’ என்ற நிகழ்ச்சி நாளை (29-ம் தேதி) நடைபெற உள்ளது. திருப்பத்தூர் சி.கே.சி. திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இம்முகாமில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகளின் பொதுமேலாளர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த முகாமில் பொது மக்களுக்கு விவசாய கடன், சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோர் கடன், வீட்டு வசதி கடன், கல்விக்கடன், வாகன வசதி கடன், தனிநபர் கடன் மற்றும் பொது மக்களுக்கு தேவையான வங்கி தொடர்பான விவரங்கள் வழங்கப்பட உள்ளன.
எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான வங்கிகள் தொடர்பான ஆலோசனைகளை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT