முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்து தற்கொலை செய்த சிலம்பாட்ட வீரர் :
மனைவியுடன் தகராறு மற்றும் கடன் தொல்லைகள் காரணமாக மன உளைச்சல் அதிகமாக இருப்பதாகக் கூறி, 27 வயது சிலம்பாட்ட வீரர், முக நூலில் நேரலை செய்து நேற்று தற்கொலை செய்துகொண்டார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (27). சிலம்பாட்ட வீரர். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, மாலினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தம்பதியர், திருப்பூர் விஜயாபுரம் அருகே காட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம், இவரது மனைவி அனைத்து தெற்கு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரிக்க அழைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் முகநூலில் நேரலையில் பேசிய மணிகண்டன், “என்னால் வாழமுடியாது. மன்னித்துவிடுங்கள். மனைவி என்னுடன் இல்லை. கடன் தொல்லை அதிகமாகிவிட்டது. நான் கேவலமானவனாக மாறிவிட்டேன். அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன்’’ என கூறிவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்தார். இந்த வீடியோவை முகநூலில் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனை பார்த்த அவரது நண்பர்கள் வீட்டுக்கு சென்றபோது, அவர் சடலமாக கிடந்தார். நல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.
