Published : 27 Oct 2021 03:09 AM
Last Updated : 27 Oct 2021 03:09 AM

தேனியில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை : 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை

தேனி அருகே வேதபுரியில் உள்ள கோயிலில் கொள்ளையடிக்கப்பட்டது போக தப்பிய சிலைகள்.

தேனி

தேனி அருகே வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயில் கண்ணாடியை உடைத்து நள்ளிரவில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 9 சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதில் மோப்ப நாய் தேடலில் வனப்பகுதியில் கிடந்த ஒரு சிலை மீட்கப்பட்டது.

தேனி அரண்மனைப் புதூர் அருகே உள்ளது வேதபுரி. இங்குள்ள சுவாமி சித்பவானந்த ஆசிரமத்தின் முகப்புப் பகுதியில் தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு மூலவர் சிலைக்குப் பின்புறம் உள்ள கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் கோயிலுக்குள் புகுந்தனர். பின்னர் கர்ப்பகிரகத்தைச் சுற்றி நிர்மாணிக்கப்பட்டிருந்த வேதவியாசர் மாணிக்கவாசகர் தாயுமானவர், பலிபீடம், நந்திகேஸ்வரர் மற்றும் 4 சனாதன முனிவர்கள் என 9 ஐம்பொன் சிலைகளையும் திருடிச் சென்றனர். இவை அனைத்தும் முக்கால் அடியில் இருந்து ஒரு அடி வரையிலான சிலைகள் ஆகும். நேற்று காலை இதைப் பார்த்த ஆசிரம நிர்வாகிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே நேரில் விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு செய்தனர். மோப்ப நாய் பைரோ அருகேயுள்ள வனப்பகுதியில் தேடியதில், அங்கு வேதவியாசர் சிலை கிடப்பது தெரிய வந்தது. திருடர்கள் சிலைகளை மொத்தமாக எடுத்துச் சென்றபோது இச்சிலையை தவற விட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆசிரம மேலாளர் அளித்த புகாரின்பேரில், பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிந்து 2 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிலைகளைக் கொள்ளை யடித்துச் சென்றவர்களை விரைவில் பிடிக்க வலியுறுத்தி கோயில் முன் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் மாவட்ட எஸ்பியிடம் மனு கொடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x