பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் : சமூக நலத்துறை முகாமில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

தூத்துக்குடியில் சமூக நலத்துறை திட்டங்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த கண்காட்சியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ். 							படம்: என்.ராஜேஷ்.
தூத்துக்குடியில் சமூக நலத்துறை திட்டங்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த கண்காட்சியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ். படம்: என்.ராஜேஷ்.
Updated on
1 min read

``பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த சட்டத்தை மத்திய அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும்” என கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார்.

சமூக நலத்துறை சார்பில், தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த, ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் அவர் பேசியதாவது:

குழந்தைகளின் உரிமைகள், மனநிலைகளை உணர மக்கள்தவறிவிடுகிறார்கள். குழந்தைகளை அடிப்பது, துன்புறுத்துவது, அவர்களது மனதை பாதிக்கும் வகையில் பேசுவது போன்றவை குற்றமாகும். அது பெற்றோராக இருந்தாலும், ஆசிரியராக இருந்தாலும் குற்றம் தான். கரோனாவால் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளன. தைரியம், தன்னம்பிக்கை, சொந்த காலில் நிற்கும் உறுதி உள்ளவர்களாக குழந்தைகளை வளர்ப்பதுதான் பெற்றோரின் கடமை. பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த சட்டத்தை மத்திய அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

குழந்தை பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு முக்கியமானது. குழந்தை திருமணங்களை தடுக்க வேண்டும். இவ்வாறு எம்.பி. பேசினார்.

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் பேசும்போது, ``தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. அந்த மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தகவல் அறிந்தால் மக்கள் 1098, 1091, 181 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றார் அமைச்சர்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் ச.வளர்மதி, எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புற்றுநோய் விழிப்புணர்வு

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கனிமொழி எம்பி, அமைச்சர் பெ.கீதாஜீவன், மாநகராட்சி ஆணையர் சாரு, மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in