

மரக்காணம் அருகே முதலியார்குப்பத்தில் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
மரக்காணம் அருகே முதலியார்குப்பத்தில் "இல்லம் தேடிக்கல்வி” திட்ட தொடக்க நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் அலுவலர்களுக்கான கலந்தாலோசனைக்கூட்டம் நேற்று அமைச்சர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று நலத்திட்ட உதவிகளை பெற வரும் பயனாளிகள், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சிற்றுண்டி வசதிகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறையினரிடம் கேட்டறிந்தார். இதே போல மேடைவசதி, ஒலி, ஒளி வசதி,மின்திரை வசதி,இருக்கை வசதி, வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதி, மின் விளக்கு வசதி, சாலை வசதி, தற்காலிக கழிவறை வசதி குறித்தும் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணியை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார்.
ஆட்சியர் மோகன், டிஐஜி பாண்டியன், சிறப்பு பாதுகாப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன், காவல் கண்காணிப்பாளர்கள் நாதா, சக்திகணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.