பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் இன்று உபரிநீர் திறப்பு : மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் இன்று உபரிநீர் திறப்பு   :  மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் - பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் இன்று (25-ம் தேதி) உபரிநீர் திறக்கப்பட உள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றுக்கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆந்திர மாநிலம் - சித்தூர் மண்டலம், பிச்சாட்டூர் கிராமத்தில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. 281 அடி உயரம் உள்ள பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் கடந்த 22-ம் தேதி காலை நிலவரப்படி, 279.45 அடி நீர் இருப்பு உள்ளது.இதனால், அணையின் பாதுகாப்பு கருதி, ஆந்திர அரசு, இன்று உபரிநீரை திறந்துவிட இருக்கிறது.

ஆகவே, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை முதல், ஆரணி ஆறு பழவேற்காடு ஏரியில் கலக்கும் பகுதி வரை, ஆரணி ஆற்றின் இருபுற கரைகளை ஒட்டியுள்ள ஊத்துக்கோட்டை, போந்தவாக்கம், வடதில்லை, பேரண்டூர், பாலவாக்கம், கீழ்மாளிகைப்பட்டு, பெரியபாளையம், ஆரணி, புதுவாயல், வெள்ளோடை, பாலவாக்கம், கவரைப்பேட்டை, பெருவாயல், பொன்னேரி, ஆலாடு, தத்தமஞ்சி, ஆண்டார்மடம், வஞ்சிவாக்கம், திருவெள்ளவாயல் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் வருவாய்த் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in