கரூரில் ரூ.6.5 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் : மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்

கரூரில் ரூ.6.5 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் :  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்
Updated on
1 min read

கரூர் மாநகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள கட்டிடத்தில் ரூ.6.5 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கரூர் வைஸ்யா வங்கியின் சமூக பொறுப்பு நிதி ரூ.2.30 கோடி, பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளை சார்பில் ரூ.47.61 லட்சம் நிதியில் 15 ஸ்மார்ட் கிளாஸ்கள், 2 ஆய்வுக்கூடங்கள், ஆசிரியர் ஓய்வறை, கழிப்பறை ஆகியவை பழமை மாறாமல் ஏற்கெனவே இருந்த கட்டிடம் போல கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இவற்றை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திறந்து வைத்து, தான் படித்த அந்த பள்ளியின் வகுப்பறையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர், முன்னாள் தலைமை ஆசிரியர் பி.செல்வதுரை காலில் விழுந்து ஆசி பெற்றார்.

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியது: நான் படித்த பள்ளியில், கரூர் மாநகராட்சியான பிறகு நடக்கும் முதல் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. கரூர் வேளாண்மை கல்லூரி, நகராட்சி பல்நோக்கு மையக்கட்டிடத்தில் செயல்படவும், நிகழாண்டு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளவும் பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கரூர் மாநகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள கட்டிடத்தில் ரூ.6.5 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கரூரின் பழமையான கலாச்சாரத்தை இனி வரும் தலைமுறை தெரிந்துகொள்ளவேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் வைஸ்யா வங்கி மேலாண்மை இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரூ.6 கோடியில் குடிநீர் திட்டம்

அப்போது, அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியது: மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சிக்கு நெரூர் காவிரி ஆற்றில் இருந்து ரூ.6 கோடியில் குடிநீர் கொண்டுவரும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பஞ்சமாதேவி பகுதியில் அரசு மருத்துவமனை கொண்டுவரப்படும். மேலும், விளையாட்டு மைதானம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, பழனிக்குமார், மண்மங்கலம் வட்டாட்சியர் செந்தில்குமார், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சித் தலைவர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in