திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள - காவலர் வீர வணக்க நாள் பாடலை தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்த முதல்வர் :

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள  -  காவலர் வீர வணக்க நாள் பாடலை தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்த முதல்வர்  :
Updated on
1 min read

காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில், `வீர வணக்கம்’ என்ற தலைப்பில் போலீஸாரின் பணிகள் மற்றும் அவர்களின் தியாகங்களை சித்தரிக்கும் காட்சிகள் மற்றும் செந்தமிழ் கவிதை வரிகள் அடங்கிய பாடல் குறுந்தகடு நேற்று வெளியிடப்பட்டது.

திருவள்ளூர் எஸ்.பி. வருண்குமார் இதை வெளியிட்டார். இந்த வீர வணக்க நாள் பாடலை கும்மிடிப்பூண்டி காவல்நிலைய பெண் காவலர் சசிகலா எழுதியதோடு, மாற்றுத் திறனாளி பாடகர் திருமூர்த்தியுடன் இணைந்து பாடியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் இப்பாடல் உருவாகியுள்ளது. இதில், கரோனாவால் உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையிலும், திருச்சி மாவட்டத்தில் சாலை விபத்தில் உடல் அசைவின்றி இருந்த முதியவரை செயற்கை சுவாசம் கொடுத்து காப்பாற்றிய காவலர் பிரபு, கடலூர் மாவட்டம் புவனகிரியில் வேகமாக வந்த லாரி முன்பாக சைக்கிளில் வந்த சிறுவனை விபத்தில் சிக்காமல் காப்பாற்றிய போக்குவரத்து காவலர் ராஜதீபன் மற்றும் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை கவுரவிக்கும் வகையிலும் கா்்ட்சிகள் உள்ளன.

யூடியூபில் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இப்பாடலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

‘சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உணவு - உறக்கம் - இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அத்தனை காவலர்களுக்கும், காவலர் வீர வணக்க நாளில் வீர வணக்கங்கள்’ என குறிப்பிட்டு இதை பகிர்ந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in