ஓசூரில் போலி ஆவணங்கள் மூலம்வங்கிகளில் ரூ.29.68 லட்சம் மோசடி : வங்கிக் கிளை மேலாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு

ஓசூரில் போலி ஆவணங்கள் மூலம்வங்கிகளில் ரூ.29.68 லட்சம் மோசடி :  வங்கிக் கிளை மேலாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு
Updated on
1 min read

ஓசூரில் போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளில் ரூ.29.68 லட்சம் மோசடி செய்ததாக 5 பேர் மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி எஸ்பிஐ வங்கியில் துணை பொது மேலாளராக பணிபுரிந்து வருபவர் வி.கே.ரேகா. இவர் ஓசூர் ஸ்டேஷன் ரோடு, மூக்கண்டப்பள்ளி, மத்திகிரி உள்ளிட்ட வங்கிக் கிளைகளில் கடன் பெற்றவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்தார். அதில் போலி ஆவணங்கள் மூலம் கடன்கள் வழங்கி உள்ளது தெரிந்தது. இதுதொடர்பாக துறைரீதியான விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஸ்டேஷன் ரோடு வங்கிக் கிளையின் மேலாளர் ரங்கநாதன் போலி ஆவணங்கள் தயாரித்து கடன்கள் வழங்கியது தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் வங்கியின் சார்பில் 3 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதில், வங்கிக்கிளை மேலாளர் ரங்கநாதன் மற்றும் ஓசூர் சந்தானப்பிரியா, ஓசூர் குமதேப்பள்ளி சரத்குமார், கோபால், ஓசூர் கொல்லப்பட்டி முருகேசன் ஆகியோர் தனிநபர் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவை போலி நிறுவனங்கள் பெயரிலும், ஆவணங்கள் மூலம் ரூ.29 லட்சத்து 68 ஆயிரம் கடன்கள் பெற்றுள்ளதாகவும், திரும்ப செலுத்தப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்ஐ மோகன் ஆகியோர் வங்கிக்கிளை மேலாளர் ரங்கநாதன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in