

நெல் கொள்முதல் செய்வதில் இயற்கை யாலும், அதிகாரிகளாலும் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
இங்குள்ள இறவை நீரேற்று நிலையம் பழுதடைந்துள்ளதால், இப்பகுதியில் பாசனம் பெறும் 2,200 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இறவை நீரேற்று நிலையத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். இது தொடர்பாக முதல்வர், நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.
தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி உடனடியாக நெல் கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
தற்போது மழைக்காலம் என்பதால், நெல் ஈரப்பதத்துடன் தான் இருக்கும். விவசாயிகள் நெல்லை காய வைக்க இயற்கை ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. நெல் மணிகள் மழையில் நனைவதற்கு விவசாயிகள் பொறுப்பேற்க முடியாது. நெல்கொள்முதலில் இயற்கை ஒருபுறம், அதிகாரிகள் மறுபுறம் என விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஈரப்பதத்தை காரணம் காட்டாமல், அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். ஈரப்பதம் குறித்து மத்திய அரசின் அதிகாரிகள் ஆய்வு செய்தது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.