

துபாயில் கட்டிட வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக இணையம் மூலம் விளம்பரப்படுத்தி போலி விசா அனுப்பி, கூலித் தொழிலாளியிடம் ரூ.1.40 லட்சத்தை பறித்த கும்பலை சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் சமீபகாலமாக இணைய மோசடி மூலம் அப்பாவிக ளிடம் லட்சக்கணக்கில் பணத்தை பறிப்பது அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க காவல்துறையில் மாவட்ட அளவில் சைபர் கிரைம் பிரிவு ஏற்படுத்தப்பட்டாலும், சைபர் குற்றங்கள் குறையவில்லை. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் கோவிலாபட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பழனிச்சாமி (42). கரோனா உள்ளிட்ட காரணங்களால் வேலையின்றி சிரமப்பட்ட அவர், வெளிநாடு செல்ல முடிவு செய்தார். இதற்கிடையில் யு.எல்.புட்டையன் என்ற நிறுவனம் மூலம், துபாயில் கம்பி கட்டும் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக, இணையத்தில் விளம்பரம் செய்யப்பட்டது.
இதைப் பார்த்த பழனிச்சாமி அந்த நிறுவன இணையதளத்தை தொடர்பு கொண்டார். அப்போது துபாய் கோடு உள்ள மொபைல் எண்ணில் இருந்து ஒரு நபர் பழனிசாமியிடம் நைசாக பேசியுள்ளார்.
மேலும் அவர் ரூ.1,40,500 செலுத்தினால் வேலைக்கான விசாவை உடனே அனுப்புவதாகக் கூறியுள்ளார். இதை நம்பிய பழனிச்சாமி, தனது உறவினர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் மூலமே பணத்தை செலுத்தினார்.
இதையடுத்து அவருக்கு தபாலில் விசா, விமான டிக்கெட் வந்துள்ளது. அதன்பிறகு குறித்த தேதியில் துபாய் செல்வதற்காக பழனிச்சாமி திருச்சி விமான நிலையம் சென்றார். அப்போதுதான் தனக்கு அனுப்பப்பட்ட விசா, விமான டிக்கெட் போலி எனத் தெரிய வந்தது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட எஸ்பி செந்தில்குமாரிடம் பழனிச்சாமி புகார் செய்தார்.
இதையடுத்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிந்து வெளிநாட்டு வேலை மோசடிக் கும்பலை தேடி வருகின்றனர்.