

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் ஷோரூம்களில் ரூ.1.75 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி தெரிவித்தார்.
நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி முதல் விற்பனையை தொடங்கி வைத்து ஜவுளி ரகங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
தீபாவளி பண்டிகைக்காக நாமக்கல் கோ-ஆப்டெக்ஸில் ரூ.1 கோடியே 45 லட்சமும், திருச்செங்கோட்டில் ரூ.30 லட்சமும் விற்பனை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 30 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. மேலும், கைத்தறி ரகங்ளுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.