லாரிகளில் சரக்கு ஏற்ற, இறக்குவதற்கான - கூலியை லாரி உரிமையாளர்கள் வழங்க வேண்டாம் : மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

லாரிகளில் சரக்கு ஏற்ற, இறக்குவதற்கான -  கூலியை லாரி உரிமையாளர்கள் வழங்க வேண்டாம் :  மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
Updated on
1 min read

லாரிகளில் சரக்கு ஏற்றிச்செல்லும்போது லாரி உரிமையாளர்கள் ஏற்றுக்கூலி, இறக்கு கூலி, மாமூல் போன்றவற்றை தர வேண்டாம், என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளரும், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான வாங்கிலி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, லாரிகளில் ஏற்றப்படும் சரக்குக்கு ஏற்று கூலி, இறக்கு கூலி, லோடு மாமூல் போன்றவற்றை சரக்கு உரிமையாளர்கள் தான் கொடுக்க வேண்டும்என்கிற நடைமுறை கடந்த 15-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக வணிகர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் லாரி தொழில் தொடர்புடைய பிற சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் கலந்துபேசி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் லோடு ஏற்றும் இடங்களில் இறக்கு மாமூல், தார்ப்பாய் கூலி உள்ளிட்ட செலவுகள் சரக்கு உரிமையாளரைச் சார்ந்தது என வாடகை தபாலுடன் சேர்த்து எழுதி வாங்கி வர வேண்டும். அப்போது, அதற்கான கூலியை சரக்கு உரிமையாளர்கள் கொடுத்து விடுவார்கள். நாள்தோறும் அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வால், லாரி தொழில் தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, லாரி உரிமையாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஏற்று கூலி, இறக்கு கூலி, லோடு மாமூல்போன்றவற்றை கொடுக்க வேண்டாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in