பிஏபி கால்வாயை உடைத்து குட்டைக்கு தண்ணீர் திருட்டு :

பிஏபி கால்வாயை உடைத்து குட்டைக்கு தண்ணீர் திருட்டு :

Published on

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பிஏபி விரிவாக்கக் கால்வாயில் மாணிக்காபுரத்துக்கு வடக்கு 12 மற்றும் 13-வது மடைகளுக்கு இடையில் உடையார் தோட்டம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு கால்வாயை உடைத்து அருகேயுள்ள குட்டைக்கு தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது.

இதையறிந்த பாசன சபையைச்சேர்ந்த விவசாயிகள் நேற்று காலை அங்கு சென்று பொக்லைன் உதவியுடன் உடைப்பை அடைத்தனர். கால்வாயை உடைத்தவர்கள் மீது பிஏபி நிர்வாகம் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பல்லடம் பிஏபிஉதவி பொறியாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து சாமளாபுரம் நீரை பயன்படுத்துவோர் சபை விவசாயிகள் கூறும்போது, ‘‘அக்டோபர் 16-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டு, அன்று மாலைதான் தண்ணீர்வந்தது. அன்றைய தினம் இரவே சிலர் 12 மற்றும் 13-வது மடைகளுக்கு இடையே உடைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர்’’ என்றனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பல்லடம் ஒன்றியச் செயலாளர் வி.பழனிசாமி கூறும்போது, ‘‘இதுவரை பிரதான கால்வாயில் உடைத்து தண்ணீர் திருடப்பட்ட சம்பவம் இப்பகுதியில் நடைபெற்றதில்லை. எனவே இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திருட்டை தடுக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில்அதிகாரிகள் ஈடுபட வேண்டும்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in