Published : 18 Oct 2021 03:13 AM
Last Updated : 18 Oct 2021 03:13 AM

பங்களாதேஷ் பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் : இந்து முன்னணி மாநில தலைவர் தகவல்

வேலூரில் இந்து முன்னணி சார்பில் நேற்று நடைபெற்ற பிரச்சார யாத்திரையில் பங்கேற்றவர்கள். படம். வி.எம்.மணிநாதன்.

வேலூர்

பங்களாதேஷ் பயங்கரவாதிகள் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊடுருவி உள்ளதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கோயில்களுக்கு பக்தர்கள் நன் கொடையாக வழங்கிய நகைகளை உருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் பிரச்சார யாத்திரை நிகழ்ச்சி வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேலூர் கோட்டத் தலைவர் மகேஷ் முன்னிலை வகித்தார். இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்து பிரச்சார யாத்திரை தொடங்கி வைத்தார்.

இந்து முன்னணியினர் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதி யில் இருந்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் காடேஸ்வரா சுப்பிரமணியம், செய்தியாளர்களிடம் கூறும்போது, "கடவுள் நம்பிக்கை இல்லாத இந்த அரசு கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் நேற்று முன்தினம் சென்னையிலும், அதைத்தொடர்ந்து வேலூரிலும் பிரச்சார யாத்திரை தொடங்கி யுள்ளோம். தொடர்ந்து, திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்து முன்னணி சார்பில் பிரச்சார யாத்திரை நடத்தப்படும்.

பக்தர்கள் கோயில்களுக்கு காணிக்கையாகவும், வேண்டு தலுக்காக தங்கம், வைரம், வைடூரியம், முத்து என விலை மதிப்பில்லாத நகைகளை வழங்கி யுள்ளனர். இதை உருக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை. கடந்த2015-ம் ஆண்டில் கோயில்களில் உள்ள நகைகள் குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதற்கான பதில் அரசிடம் இல்லை.நகைகளை உருக்கும் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்?

கோயில் நகைகள் விவகாரத்தில் ஏற்கெனவே ஒரு சில கோயில்களில் ஊழல் நடந்துள்ளது. அதேபோல, தற்போது நகைகளை உருக்கும் திட்டத்தில் பல ஊழல்கள் நடக்க வாய்ப்புள்ளது. நகைகளை உருக்கி அதை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அப்படி என்றால் எந்த வங்கியில் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

பங்களாதேஷ் நாட்டில் துர்கா பூஜையின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் நடத்தியதில் 10 இந்துக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு யாரும் குரல் கொடுக்கவில்லை. தமிழகத்தில் காஞ்சி புரத்தில் பள்ளி மாணவர்கள் ருத்ராட்சம் அணிந்து வந்ததால் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பங்களாதேஷ் பயங்கரவாதிகள் தமிழகத்தில் உள்ள திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊடுருவி உள்ளனர். இதை கண்காணித்து தமிழக அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப் படுத்தாவிட்டால் பெரிய சதிச்செயல் தமிழகத்தில் நிகழ வாய்ப்புள்ளது. வேலூரில் இந்து முன்னணி கொடி கம்பம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் வரும் 26-ம் தேதி இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x