

நவராத்திரி திருவிழாவையொட்டி கிருஷ்ணகிரியில் 9 கோயில் சப்பரங்கள் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்றது.
கிருஷ்ணகிரியில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சைவ மற்றும் வைணவ கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி திருவீதியுலா காட்சி நடைபெறும். அதன்படி நிகழாண்டில், நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் கோயில்களில் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில், பழையபேட்டை நரசிம்மசுவாமி கோயில் தெருவில் உள்ள மாரியம்மன் கோயில், கிருஷ்ணர் கோயில், மலையடிவாரத்தில் உள்ள கவீஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், திருநீலகண்டர் கோயில், பழையபேட்டை சீனிவாசர் கோயில், தஞ்சாவூர் மாரியம்மன் கோயில், காட்டிநாயனப்பள்ளி சுப்பரமணியசுவாமி கோயில் மற்றும் கார்வேபுரம் கல்கத்தா காளிக்கோயில் உட்பட 9 கோயில்களில் இருந்து மின் விளக்குகளாலும், வண்ணமலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதி உலா வந்தனர். இரவு முழுவதும் நடந்த தேரோட்டம் நேற்று காலை கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்றன. அவ்வாறு அணிவகுத்து நின்ற தேர்களில் உள்ள சுவாமிகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று கூடி வழிபட்டனர். இதனை தொடர்ந்து அனைத்து தேர்களும் மீண்டும் தங்களது கோயிலுக்கு சென்றன.