

வடமாநிலங்களில் இருந்து குட்கா போதைப் பொருள் அதிக அளவில் கடத்தி வரப்பட்டு சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுவதாக கவரைப்பேட்டை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் பெருவாயல் சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது, லாரியில் குட்கா போதைப் பொருள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, அந்த லாரியில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் எடையுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, கவரைப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரியில் வந்த பொன்னேரியைச் சேர்ந்த கண்ணன், அசோக்குமார், வேலூரைச் சேர்ந்த பூவரசன், விஜய் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.