Published : 17 Oct 2021 03:10 AM
Last Updated : 17 Oct 2021 03:10 AM

தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : தமுமுக, மமக நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்

கும்பகோணம்

தமிழகத்தில் போதைப் பொருட்கள் பயன்பாட்டை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமுமுக, மமக நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். கட்சியின் பொதுச் செயலாளரும், மணப்பாறை எம்எல்ஏவுமான ப.அப்துல்சமது, தமுமுக பொதுச் செயலாளர் ஜெ.ஹாஜாகனி மற்றும் தலைமை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, அமைப்புச் செயலாளர் பாதுஷா வரவேற்றார். முடிவில், தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் ரஹ்மத் அலி நன்றி கூறினார்.

தமிழகத்தில், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வியாபாரம் அதிகளவில் நடைபெறுகிறது. தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் உறுதியளித்ததைப் போல, தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய அமைச்சரின் மகனின் வன்செயலையும், அவரை கைது செய்வதில் சுணக்கமாக நடந்துகொண்ட உத்தரப்பிரதேச அரசையும் கண்டிப்பது. இந்த கொலை வழக்கில் அமைச்சரின் மகனுக்கு உத்தரப்பிரதேச அரசு சாதகமாக நடந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளதால், இந்த வழக்கை பாஜக ஆட்சி அல்லாத வேறு மாநிலங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x