

தூத்துக்குடி அருகே பிரபலரவுடி துரைமுருகன் போலீஸாரால்நேற்று முன்தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நேற்று விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி அருகே உள்ள திருமலையாபுரத்தை சேர்ந்த துரைமுருகன் (44), பிரபல ரவுடி. கடந்த வாரம் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சிவகாமிபுரத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் கொலை செய்யப்பட்டு, திருநெல்வேலி அருகேகாட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட வழக்கில், துரைமுருகனை போலீஸார் தேடி வந்தனர்.
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு காட்டுப்பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல்கிடைத்தது. போலீஸார் சுற்றி வளைத்தபோது உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர் டேவிட்ராஜா ஆகியோரை, துரைமுருகன் அரிவாளால் வெட்டியுள்ளார். உடனடியாக உதவி ஆய்வாளர் ராஜபிரபு துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே துரைமுருகன் இறந்தார்.
இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி 2-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உமாதேவி நேற்று நேரில் விசாரணை நடத்தினார். அவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த துரைமுருகனின் உடலை பார்வையிட்டார்.
தொடர்ந்து, இறந்தவரின் தாய் சந்தனம், சகோதரிகள் கன்னியம்மாள், ராமலட்சுமி, ராதாலட்சுமி, முனீசுவரி, உறவினர்கள் கண்ணன், உதயகுமார், முத்துக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தார்.
அதேபோல், காயமடைந்துசிகிச்சையில் உள்ள உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர் டேவிட்ராஜா ஆகியோரிடமும் வாக்குமூலம் பதிவு செய்தார். பின்னர்,துரைமுருகனின் உடலில் குண்டுகள் பாய்ந்து இருப்பது தொடர்பாக, மருத்துவர்களிடம் விளக்கங்களைப் பெற்றார்.
தொடர்ந்து, மாலை 3.10 மணி அளவில் நீதிபதி உமாதேவி முன்னிலையில் பிரேத பரிசோதனை தொடங்கியது. பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. பிறகு, உடல் அவரது தாய் சந்தனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துரைமுருகனின் உடல் தூத்துக்குடியில் உள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.
ஜெகதீஷ் என்பவர் கொலை செய்யப்பட்டு, திருநெல்வேலி அருகேகாட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட வழக்கில், துரைமுருகனை போலீஸார் தேடி வந்தனர்.