Published : 17 Oct 2021 03:10 AM
Last Updated : 17 Oct 2021 03:10 AM

‘இது என்னுடைய மரம்’ என்ற பெயரில் - காவல் துறையினர் பங்கேற்புடன் 5,000 பனை விதைகள் நடும் பணி : வேலூர் மாவட்ட எஸ்.பி., செல்வகுமார் தொடங்கி வைத்தார்

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக சலமநத்தம் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் 5,000 பனைமர விதைகள் நடும் விழா நடைபெற்றது. இதனை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் நேற்று தொடங்கி வைத்தார். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் ‘இது என்னுடைய மரம்’ என்ற பெயரில் ஒரே நாளில் 8 கி.மீ தொலைவுக்கு 5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

வேலூர் அடுத்த சலமநத்தம் பகுதியில் மாவட்ட காவல் துறையினருக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம் சுமார் 100 ஏக்கரில் உள்ளது. பொட்டல்காடாக இருக்கும் இந்த மலையடிவார பகுதியை பசுமையாக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏற்கெனவே இங்கு சுமார் 1,500 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மலையடிவார பகுதியின் நீர்வளத்தை பாது காக்கவும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்தின் எல்லை பகுதியில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் நேற்று தொடங்கி வைத்தார். சலமநத்தம் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்தை சுற்றிலும் சுமார் 8 கி.மீ தொலைவுக்கு காவல் துறையினர் வரிசையாக நிறுத்தப்பட்டு பனை விதைகளை நேற்று நட்டனர்.

மாவட்டத்தில் உள்ள காவல் துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரையிலான 700 பேர் உதவியுடன் பனை விதைகள் நேற்று ஒரே நாளில் நடப்பட்டன. இதற்காக, வேலூர் ஆயுதப்படை காவலர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விவசாயிகளிடம் இருந்து 5 ஆயிரம் பனை விதைகளை சேகரித்து பாதுகாத்து வந்துள்ளனர்.

‘இது என்னுடைய மரம்’ என்ற பெயரில் நடைபெற்ற பனை விதை நடும் பணி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘பனை மரம் நீர்வளத்தை சேமித்து மண் வளத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. சலமநத்தம் மலை பகுதியில் பெய்யும் மழைநீர் வீணாகிச் செல்வதால் நீர்வளத்தை பாதுகாக்கவும், பயிற்சி தளத்தை பசுமையாக்க பனைமரம் உதவியாக இருக்கும். இதற்காக, 5 ஆயிரம் பனை விதைகளை எல்லைப்பகுதி முழுவதும் நட்டு பராமரிக்கப்பட உள்ளன.

பனை விதை நடும் பணிக்காக துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்தின் எல்லைப்பகுதியில் வளர்ந்திருந்த புதர்கள் அகற்றப்பட்டு நான்கு சக்கர வாகனம் செல்லும் அளவுக்கு வழி ஏற்படுத்தப்பட்டு பனை விதை நடப்பட்டுள்ளது. அதேபோல், மலை மீதும் மரங்கள் வளர்க்க வசதியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில், காவலர்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள், காவலர்கள் 700 பேர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பனை விதையை ‘இது என்னுடைய மரம்’ என்ற பெயரில் நட வேண்டும் என்று கூறினேன்.

நாளை ஒரு நாள் இங்கு அவர்கள் மீண்டும் வரும்போது அவர்கள் நட்ட விதை மரமாக வளர்ந்து நிற்பதை பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x