

இன்று (அக்.14) ஆயுதபூஜை கொண்டாடுவதை ஒட்டி, திருப்பூர்ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள பூமார்க்கெட்டில் நேற்று அதிகளவிலான பொதுமக்கள் திரண்டனர்.
தொழில் நகரமான திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களில் ஆயுதபூஜை கொண்டாட்டம் வெகுவிமர்சையாக நடைபெறும். நிறுவனங்கள், இயந்திரங்களை சுத்தம் செய்து ஆயுதபூஜை கொண்டாடப்படுவது வழக்கம்.
கடந்த ஒன்றரை ஆண்டு களாக கரோனா தொற்று பாதிப்பால் பெரும் பின்னடைவை சந்தித்த பின்னலாடைத் தொழில், தற்போது மெல்லமெல்ல பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது.
இந்த உற்சாகத்துடன், ஆயுதபூஜையையும் உற்சாகமாக கொண்டாட தொழில் துறையினரும், திருப்பூர் மாநகர மக்களும் முடிவு செய்திருந்தனர். இதற்கான பூஜை பொருட்களை வாங்க பொதுமக்கள் திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று திரண்டனர்.
பூக்கள் விலை உயர்வு
திருப்பூர் பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிகளவில் திரண்ட நிலையில், கரோனா தடுப்பு விதிகள் காற்றில் பறந்தன. பலரும் முகக்கவசம் இன்றி திரண்டனர். பெருந்தொற்று காலத்தில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் திரண்டது, பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.