Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

செங்கை, காஞ்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கணவன் - மனைவி வெற்றி :

கோவிலம்பாக்கம் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட கீதா மற்றும் மணிமாறனுக்கு வெற்றி பெற்ற தற்கான சான்றை தேர்தல் அலுவலர் சிவகலைச்செல்வம் வழங்கினார்.

செங்கல்பட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொளப்பாக்கம் ஊராட்சியில் அதிமுக சார்பில் ஊராட்சி மன்ற தலைவருக்கு மாலதி ஏசுபாதமும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அவரது கணவர் ஏசுபாதமும் போட்டியிட்டனர். அதேபோல் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் மனோகரனும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அவரது மனைவி சரஸ்வதி மனோகரனும் போட்டியிட்டனர். இத்தம்பதிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதேபோல் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவருக்கு தமிழ் அமுதனும், 12-வது வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு அவரது மனைவி மலர்விழி தமிழ் அமுதனும் போட்டியிட்டனர். போட்டியிட்ட இருவரும் வெற்றி பெற்றனர். குன்றத்தூர் ஒன்றியத்தில் திமுக சார்பில் 2 குடும்பத்தினரும், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஒரு குடும்பமும் வெற்றி பெற்ற ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதேபோல் பெரும்புதூர் ஒன்றியத்தில் போந்தூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்ராஜ், அதிமுக சார்பில் 5-வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது தாயார் சரோஜா போந்தூர் கிராம ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

எறையூர் கிராமத்தில், கிராம ஊராட்சி மன்ற செயலாளராக இருப்பவர் சரவணன். இவரது மனைவி சசிரேகா ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் வல்லம் ஊராட்சி மன்ற செயலர் சுரேஷ்பாபு இவருடைய மனைவி கோமதி திமுக சார்பில் 15-வதுவார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியத்தில் கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கீதா மணிமாறன் வெற்றி பெற்றார். இவரது கணவர் மணிமாறன் அதே ஊராட்சி 12-வதுவார்டு உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

மதுரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக வேல்முருகன் வெற்றி பெற்றார். இவரது மனைவி அமுதா புனித தோமையார் மலை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அமுதா வேல்முருகன் திமுகவில் சீட் கொடுக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மேடவாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக சிவபூஷ்ணம் வெற்றி பெற்றுள்ளார். இவரது கணவர் ப.ரவி 9-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x