அக்.16 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை :

அக்.16 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை :
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக பெய்த மழையால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளன. நேற்று முன்தினத்தில் இருந்து மழை நின்று வெயில் அடித்து வருவதால், பல பகுதிகளில் தேங்கிய மழைநீர் வடிந்து வருகிறது. பேச்சிப்பாறை நீர்மட்டம் 43.70 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 1,746 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1,450 கனஅடி தண்ணீர் உபரியாக திறந்துவிடப்பட்டுள்ளது.

இதைப்போல 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 74.50 அடியாக உள்ளது. அணைக்கு 1,122 கனஅடி தண்ணீர் வருவதால், விநாடிக்கு 768 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 16.04 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 278 கனஅடி தண்ணீர் வருகிறது. பொய்கையில் 29 அடியும், மாம்பழத்துறையாறில் 26 அடியும் தண்ணீர் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நிரம்பி மறுகால் பாய்கிறது.

இந்நிலையில், புயல் எச்சரிக்கையால் வரும் 16-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பில், “இன்று (14-ம் தேதி) மன்னார் வளைகுடா, குமரி கடற்பகுதி, கேரள கடற்பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு கடற்பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், நாளை (15-ம் தேதி), 16-ம் தேதி ஆகிய இரு நாட்கள் தென்மேற்கு வங்காள விரிகுடா, குமரி கடற்பகுதி, மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு கடற்பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இந்த நாட்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

சென்னை வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும என்பதால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, பெருமணல் மற்றும் கூட்டப்புளி ஆகிய 7 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் நாளை மறுதினம் (16-ம் தேதி) வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், ``இன்று (14-ம் தேதி) முதல் 16.10.2021 வரை தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்” என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in