Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

தனித் தனியாக பிரித்துவிட்டு தொடங்கியதால் - வாக்கு எண்ணிக்கை தாமதம் : மேஜை மீது சின்னம் இல்லாததால் எதிர்ப்பு

ஒவ்வொரு பதவிக்குமான வாக்குகளையும் தனித் தனியாக பிரித்து வாக்கு எண்ணிக்கையை தொடங்கியதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமானது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மாவட்டக் குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்றக் குழு உறுப்பினர் என 4 பதவிகளுக்கு நடைபெற்றது. இந்த 4 பதவிகளுக்கு ஒவ்வொரு வாக்காளரும் வாக்களித்து அவற்றை மொத்தமாக ஒரே வாக்குப் பெட்டியில் செலுத்தினர்.

4 வண்ணங்களை உடைய இந்த வாக்குச் சீட்டுகள் தனித் தனியாக பிரிக்கப்பட்டு பின்னர் 50 சீட்டுகள் கொண்ட கட்டுகளாக கட்டப்பட்டன. இதன் பின்னரே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகவே நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் 1-வது வார்டில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போது மேஜையில் வைக்கப்பட்டிருந்த வேட்பாளர்களின் சின்னங்கள் ஒட்டப்பட்ட சிறு, சிறு பெட்டிகளுடன் கூடிய ட்ரேவும் வைக்கப்பட்டிருந்தன. இதில் யாருக்கு வாக்குகள் விழுந்ததோ அது அந்த சின்னம் உள்ள பெட்டியில் வைக்கப்படும்.

அதில் பாமக வேட்பாளரின் மாம்பழச் சின்னம், நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் விவசாயி சின்னம் இடம் பெறவில்லை. இதற்கு 2 கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்த சின்னங்கள் ஒட்டப்பட்டு வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றிய வாக்கு எண்ணிக்கை, பூஞ்சேரி அடுத்த தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இங்கு பல்வேறு குளறுபடிகளால் 8 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்கு எண்ணிக்கை 10 மணிக்கு மேல் தொடங்கியது. மேலும், வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை அறிவிப்பதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மிகவும் தாமதப்படுத்தினர்.

இதனால், முடிவுகள் தெரிந்தும் வெற்றிக்கான அறிவிப்புகள் வெளியிடவில்லை எனக்கூறி வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேறவில்லை. இதனால், தேர்தல் நடத்தும் அலுவலரின் அறையின் முன்பு வேட்பாளர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

5-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் வாக்குச் சீட்டுகளில் உள்ள முத்திரைகளில் உள்ள குழப்பங்களை அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக்கும் வகையில், செல்லாத ஓட்டாக அறிவிப்பதாக கூறி, அதிகாரிகளிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்குவாதம் செய்தனர். இப் பிரச்சினைக்கு தேர்தல் அதிகாரிகளே காரணம் எனக்கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறும்படி கூச்சலிட்டனர். இதனால், பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. போலீஸார் அனைவரையும் சமாதானப்படுத்தினர்.

முடிவுகள் தெரிந்தும் வெற்றிக்கான அறிவிப்புகள் வெளியிடவில்லை எனக்கூறி வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x