Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் அழைப்பு :

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர்கள் நேற்று தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் இத்திட்ட தொடக்க விழா முகாம் நேற்று நடந்தது. தருமபுரி அடுத்த கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமை வகித்தார். தருமபுரி எம்பி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஆட்சியர் முகாமை தொடங்கி வைத்த பின்னர் பேசியது:

‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்’ மூலம் ஏழை, எளிய மக்கள் தங்கள் வசிப்பிடத்திலேயே சிறப்பு மருத்துவ சேவை பெற முடியும். காலை 9 முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும். ஓராண்டுக்கு ஒரு வட்டத்துக்கு 3 முகாம்கள் வீதம் மாவட்டத்தின் 8 மருத்துவ வட்டாரங்களில் மொத்தம் 24 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி இலவச மருத்துவ சேவைகளை பெற்றுப் பயன்பெற வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் மலர்விழி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் சவுண்டம்மாள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் அமுதவள்ளி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். எம்எல்ஏக்கள் பர்கூர் டி.மதியழகன், ஓசூர் ஒய்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது:

கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம்களில் தேவைப்படுவோருக்கு உயர்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், நலப்பணிகள் இணை இயக்குநர் பரமசிவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x