Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

குமரியில் தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலம் மூழ்கியதால் மலை கிராமங்கள் துண்டிப்பு :

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடித்து வரும் மழையால் ஆறுகளில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலங்கள் மூழ்கியதால் மலைகிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அணைகள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 2,040 பொதுப்பணித்துறை நீர்ஆதார பிரிவுக்கு உட்பட்ட பாசன குளங்கள்நிரம்பியுள்ளன.

அதிகபட்சமாக நேற்று பேச்சிப்பாறையில் 83 மிமீ மழை பதிவாகியிருந்தது. சிற்றாறு ஒன்றில் 78 மிமீ,சிவலோகத்தில் 73, பெருஞ்சாணியில் 70, பூதப்பாண்டியில் 25, களியலில் 39, கன்னிமாரில் 27,குழித்துறையில் 28, மயிலாடியில் 25, நாகர்கோவிலில் 34, புத்தன்அணையில் 69, சுருளகோட்டில் 58, தக்கலையில் 55, பாலமோரில் 57, மாம்பழத்துறையாறில் 41, கோழிப்போர்விளையில் 43, அடையாமடையில் 57, முள்ளங்கினாவிளையில் 32, ஆனைக்கிடங்கில் 46, முக்கடல் அணையில் 23 மிமீ மழை பதிவாகியிருந்தது. மாவட்டம் முழுவதும் சராசரி மழை அளவு 44.87 மிமீ ஆகும்.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.44 அடியாக உள்ள நிலையில், அணைக்கு உள்வரத்தாக 3,783 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு உபரியாக 3,710 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 74 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 1,508 கனஅடி தண்ணீர்வருகிறது. இதைப்போல் சிற்றாறு,முக்கடல் அணைகள் நிரம்பியுள்ளன.

மழையால் கோதையாறு, பரளியாறு, வள்ளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவியில் தடுப்புவேலிகள் மற்றும் கல்மண்டபம் தெரியாதவாறு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாயகரமாக காணப்படும் திற்பரப்பு பகுதிக்கு மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனமழை தொடர்வதால் கோதையாறு நீர்மின் நிலைய அணைப்பகுதிக்கு செல்லும் தண்ணீர், மறுகாலில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் கோதையாற்றில் கடும்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குற்றியாறில் இருந்து மோதிரமலையை இணைக்கும் தரைப்பாலம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

இதனால் மோதிரமலை, குற்றியாறு இடையே போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள 11 மலைகிராமங்களிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் கடல் சீற்றம் காணப்பட்டதால் குமரி மாவட்டத்தில் நேற்று மீன்பிடி பணி பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x