தி.மலை மாவட்டத்தில் பரவலாக மழை :

திருவண்ணாமலையில் நேற்று பிற்பகலில் பெய்த மழை.படம்:இரா.தினேஷ்குமார்.
திருவண்ணாமலையில் நேற்று பிற்பகலில் பெய்த மழை.படம்:இரா.தினேஷ்குமார்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பச் சலனம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளில் பெய்து வரும் மழையால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மழையின் தாக்கம் நேற்றும் தொடர்ந்தது.

மாவட்டம் முழுவதும் நேற்று காலையில் இருந்து வானம், மேக மூட்டமாக காணப்பட்டது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. பிற்பகலுக்கு பிறகு ஆங்காங்கே மழை பெய் துள்ளது. பல இடங்களில் ஒரு மணி நேரம் வரை மழை நீடித்துள்ளது. அதன்பிறகு மழையின் சாரல் தொடர்ந்தது. மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. காலையில் பரபரப் பாக இயங்கிய வர்த்தக வீதிகள், பிற்பகலில் இருந்து வெறிச் சோடியது. தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. மேலும் விவசாய நிலங்களில் அதிகளவு தேங்கிய மழைநீரை விவசாயிகள் வெளியேற்றினர்.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் மற்றும் தென்பெண்ணையாற்று படுகையில் மழை ஆகியவற்றால், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. விநாடிக்கு 1,181 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 89.50 அடியை எட்டியது. அணையில் 2,397 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. குப்பநத்தம் அணைக்கு விநாடிக்கு 80 கனஅடி தண்ணீர் வருகிறது. 60 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 51.82 அடியை எட்டியது. அணையில் 524.80 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. குப்பநத்தம் அணை பகுதியில் 10.2 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், 22.97 அடி உயரம் உள்ள மிருகண்டாநதி அணையின் நீர்மட்டம் 15.74 அடியாகவும், 62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 52.48 அடியாகவும் உள்ளது.

மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி 3 மி.மீ., மழை பெய்துள்ளது. செய்யாறில் 1.5 மி.மீ., செங்கத்தில் 6.6 மி.மீ., ஜமுனாமரத்தூர் மற்றும் வந்தவாசியில் தலா 2 மி.மீ., திருவண்ணாமலை மற்றும் தண்டராம்பட்டு பகுதியில் தலா 6 மி.மீ., சேத்துப்பட்டில் 1.4 மி.மீ., கீழ்பென்னாத்தூரில் 13.2 மி.மீ., மழை பெய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in