மானிய திட்டங்கள், பயிர்காப்பீடு விவரங்களை : `உழவன் செயலி ’ மூலம் விவசாயிகள் அறியலாம் :

மானிய திட்டங்கள், பயிர்காப்பீடு விவரங்களை : `உழவன் செயலி ’ மூலம் விவசாயிகள் அறியலாம் :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மானிய திட்டங்கள், பயிர்காப்பீடு உள்ளிட்ட 19 வகையான பயன்பாடுகளை உழவன் செயலி மூலம் அறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜேந்திரன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களை விவசாயிகள் தெரிந்து கொள்ள உழவன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உழவன் செயலியை ஆன்டிராய்டு செல்போனில் பிளே ஸ்டோரின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதில் விவசாயிகளின் பெயர், முகவரி, செல்போன் எண் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்து பயன்படுத்தலாம். செயலி மூலம் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் குறித்த விவரம் மற்றும் வருகை தரும் நாட்களை அறிந்து கொள்ள முடியும்.

மேலும், மானிய திட்டங்கள், இடுபொருட்கள் முன்பதிவு, பயிர் காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு, வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம், சந்தை விலை நிலவரம், வானிலை அறிவுரை, பண்ணை வழிகாட்டி, இயற்கை பண்ணைய பொருட்கள் விவரம், எப்.பி.ஓ. உற்பத்தி பொருட்கள், அணை நீர்மட்டம், வேளாண் செய்திகள், பூச்சி நோய் கண்காணிப்பு மற்றும் பரிந்துரை, அட்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கங்கள், கருத்துக்கள், உழவன் இ-சந்தை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை உட்பட 19 வகையான பயன்பாடுகளை அறியலாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து, விவரங்கள் அறியலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in