Published : 11 Oct 2021 03:13 AM
Last Updated : 11 Oct 2021 03:13 AM

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி சீட்களை 150 ஆக உயர்த்த திட்டம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி சீட்களின் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்தி வழங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தேவிபட்டினத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ராமநாதபுரத்தில் தடுப்பூசி செலுத்தப்படுவது மாநில சராசரியைவிடக் குறைவாக உள்ளது. இதை அதிகப்படுத்தும் நோக்கில் இன்று(நேற்று) ஒரே நாளில் 670 இடங்களில் 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு 100 இடங்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதை 150 இடங்களாக உயர்த்தி வழங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

பின்னர் பரமக்குடியில் கரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தோளூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பஞ்சவர்ணம். இருளாயி தம்பதி மனு அளித்தனர். அதில், தங்களின் மகன் ராஜசேகர்(32), இரண்டு கிட்னிகளும் செயலிழந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்தால் உயிர் பிழைப்பார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் ராஜசேகரை காப்பாற்ற உதவ வேண்டும் என்று தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

நவாஸ்கனி எம்பி, எம்எல்ஏக்கள் முத்துராமலிங்கம்(ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி) , மாவட்ட ஆட்சியர்(பொ) ஆ.ம.காமாட்சி கணேசன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x