Published : 11 Oct 2021 03:14 AM
Last Updated : 11 Oct 2021 03:14 AM

ஈரோட்டில் வேளாண் கல்லூரி அமைக்க - அனுமதி கோரி வேளாண் பல்கலைக்கழகத்துக்கு கடிதம் :

ஈரோட்டில் வேளாண்மைக் கல்லூரி அமைப்பது தொடர்பாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற பதிவாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் ஜவுளித்தொழில் ஆகிய இரண்டும் முதன்மையான தொழிலாக உள்ளது. தடப்பள்ளி - அரக்கன் கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் பாசனம் என இரண்டரை லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாக ஒரு லட்சம் ஏக்கர் வரையும் பயன்பெற்று வருகின்றன. மஞ்சள், நெல், கரும்பு, வாழை, மரவள்ளிஎன பல்வகைப் பயிர்களும் இம்மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது.

வேளாண்மை தொடர்பான பல்வேறு பயிற்சிகள், சாகுபடியை அதிகரிக்கும் வழிமுறைகள், விதைகள், உரங்கள் பயன்பாடு என வேளாண் துறை சார்ந்த வழிகாட்டுதல்கள் இம்மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையாக உள்ளது. கோபியை அடுத்த மைராடாவில் செயல்படும் வேளாண் அறிவியல் நிலையம் மூலமும், வேளாண்மைத்துறை மூலமும் இத்தகைய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வேளாண்மையை ஊக்குவிக்கவும், வேளாண்மையை குடும்பத் தொழிலாக கொண்டவர்களின் குழந்தைகள் வேளாண் உயர்கல்வி படிக்கும் வகையில், ஈரோட்டில் வேளாண்மைக் கல்லூரியை தொடங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஈரோட்டில் வேளாண்மைக் கல்லூரி அமைக்கப்படும் என திமுக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனை நிறைவேற்றும் வகையில் தற்போது முதல்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரி தொடங்க வேண்டி, தமிழ்நாடு வேளாண்மைபல்கலைக்கழக பதிவாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கல்லூரியை எங்கு அமைக்கலாம், அதற்கான இடத்தை தேர்வு செய்வது குறித்து, வருவாய்த் துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வட்டார அளவில் மண்பரிசோதனை நிலையம் அமைக்க, திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு வட்டாரத்திற்கு ரூ.18.22 லட்சம் செலவில் மண் பரிசோதனை நிலையம் அமையவுள்ளது. அதேபோல், வட்டார அளவில் தலா ரூ.8 லட்சம் மதிப்பீட்டில், ‘அக்ரி கிளினிக்’ அமைக்க திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x