Published : 11 Oct 2021 03:15 AM
Last Updated : 11 Oct 2021 03:15 AM

ஆலங்காயம் வாக்கு எண்ணும் மையத்தை - அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் : திமுக எம்எல்ஏ ஆய்வு நடத்தியதால் சர்ச்சை

ஆலங்காயம் வாக்கு எண்ணும் மையத்தை திமுக சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர் வேட்பாளருடன் சென்று பார்வையிட்டதால் அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாதனூர் மற்றும் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையங் களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

ஆலங்காயம் ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் ஆலங் காயம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆயுதம் ஏந்திய காவலர்கள் 24 மணி நேரம் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜோலார் பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேவராஜ், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பிரியதர்ஷினி, அவரது கணவர் ஞானவேலுவுடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு நேற்று காலை வந்தார். காவல் துறையினர் அமைத்துள்ள பாதுகாப்பு தடுப்புகளை மீறி உள்ளே சென்ற அவர் வாக்குபெட்டிகளை பார்வையிட்டதாக கூறப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் இருந்த தேவராஜ் பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த தகவலறிந்த அதிமுகவினர் அங்கு குவிந்தனர். வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் குமார், முன்னாள் எம்எல்ஏ கோ.வி.சம்பத்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் அங்கு திரண்டனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் திமுக எம்எல்ஏ, மாவட்ட கவுன்சிலர் வேட்பாளருடன் சென்று வாக் குப்பெட்டிகளை மாற்றிவிட்டதாக கூறி அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த காவலர்களிடம் அதிமுகவினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பிறகு, வாக்குஎண்ணும் மையத்தில் திமுக எம்எல்ஏ சென்றதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலங்காயம் - வாணியம்பாடி சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, வாணியம் பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்பாண்டியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டகாவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். அதிமுகவினர் சிலர் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே காவலர்கள் பயன்படுத்த போடப்பட்டிருந்த நாற்காலிகள், மேஜைகளை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை, காவல் துறையினர் சமாதானம் செய்து வெளியேற்றினர்.

இதையடுத்து வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாரிடம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, மாவட்ட தேர்தல் பார்வையாளர் காமராஜ் ஆகியோர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தவறு நடக்க வாய்ப்பில்லை, தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு, ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதன் பிறகு என்ன முடிவு என்பதை எடுக்கலாம், ஆகவே முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.

ஆட்சியர் வேண்டுகோளுக்கு இணங்க முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு அதிமுகவினர் கலைந்து சென்றனர். அதன்பிறகு, அங்கு பதற்றம் தணிந்தது.

அலுவலர்கள் சஸ்பெண்ட்

ஆலங்காயம் வாக்கு எண்ணும் மையத்தில் திமுக எம்எல்ஏ ஆய்வு செய்தபோது அதை தடுக்காமல் பணியில் மெத்தனமாக இருந்த ஆலங்காயம் ஊராட்சி தேர்தல் அலுவலர்கள் உமாமகேஸ்வரி, சிவக்குமார் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், ஆலங்காயம் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த 3 காவலர்களை எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தர விட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x