இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு :

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடி, வாக்களிக்க யாரும் வராமல் நேற்று மதியம் 1.30 மணியளவில் வெறிச்சோடிக் காணப்பட்டது.படங்கள்: ம.பிரபு
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடி, வாக்களிக்க யாரும் வராமல் நேற்று மதியம் 1.30 மணியளவில் வெறிச்சோடிக் காணப்பட்டது.படங்கள்: ம.பிரபு
Updated on
1 min read

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி விறுவிறுப்பான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், பெரும்புதூர் ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்நடைபெற்றது. இந்த ஒன்றியங்களில் 5 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு 34 நபர்களும், 37 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 156 நபர்களும், 100 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 331 நபர்களும், 738 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,454 நபர்களும் போட்டியிட்டனர்.

காலை 9 மணிக்கு 10.54%வாக்குகள் பதிவாகின. காலை 11 மணி நிலவரப்படி 25.28% வாக்குகளும், நண்பகல் 1 மணி நிலவரப்படி 41.01 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 55.90%வாக்குகளும் பதிவாகின. நண்பகல் 11 மணிக்கு மேல் வாக்குப் பதிவு சதவீதம் வேகமாக அதிகரித்தது.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், காட்டாங்கொளத்தூர், மதுராந்தகம், சித்தாமூர் ஆகிய 4 ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 8 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 83 பேரும், 80 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 335 பேரும், 199 ஊராட்சி தலைவர் பதவிக்கு 1,128 பேரும், ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 5,059 பேரும் போட்டியிட்டனர்.

காலை 9 மணி நிலவரப்படி 6.85 சதவீதம் பேரும், 11 மணி நிலவரப்படி 26.07 சதவீதம் பேரும், 1 மணி நிலவரப்படி 45.38 சதவீதம் பேரும், 3 மணி நிலவரப்படி 56.78 சதவீதம் பேரும் வாக்களித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்திலும் 11 மணிக்கு மேல் வாக்குப் பதிவு சதவீதம் வேகமாக அதிகரித்தது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தல் சுமூகமான முறையில் நடைபெற்றது. ஒரு சில இடங்களில் வாய்த்தகராறுகள் மட்டும் நடைபெற்றன. பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. அதிவிரைவுப்படையினர் இரு மாவட்டங்ளிலும் தேர்தல் நடைபெறும் இடங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in