கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 1764 கனஅடி தண்ணீர் திறப்பு :

கிருஷ்ணகிரி அணையில் இருந்து நேற்று விநாடிக்கு 1764 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து நேற்று விநாடிக்கு 1764 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி பார்வையிட்டார்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நேற்று கிருஷ்ணகிரி அணையில் இருந்து 1764 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணையாற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 760 கனஅடியாக உள்ளது. கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1712 கனஅடியாக இருந்தது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் 35 மில்லிமீட்டர் மழை பெய்தது. நேற்று பிற்பகல் அணையில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போதுள்ள நிலவரப்படி கிருஷ்ணகிரி அணைக்கு விநாடிக்கு 1712 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1764 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கெலவரப்பள்ளி அணையிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஊத்தங்கரை வரை தென்பெண்ணையாற்றின் ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல 4 மாவட்ட ஆட்சியர்களுக்கும் வெள்ள அபாயம் குறித்து தகவல் அளிக்கப் பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், குழந்தைகள் தென்பெண்ணை ஆற்றினை கடக்கவோ, ஆற்றின் அருகே செல்லவோ கூடாது. கால்நடைகளை ஆற்றங்கரையோரம் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

ஆய்வின்போது வட்டாட்சியர் சரவணன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் காளிபிரியன், ஆர்ஐ ஜெயபிரபா, விஏஓ பாஞ்சாலை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in