Published : 09 Oct 2021 03:13 AM
Last Updated : 09 Oct 2021 03:13 AM

மாதனூர் அடுத்த நாயக்கநேரி மலை கிராமத்தில் இன்று நடைபெற உள்ள - உள்ளாட்சி தேர்தலில் 1,617 காவலர்கள் பாதுகாப்பு பணி : திருப்பத்தூர் எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன் தகவல்

மாதனூர் அடுத்த நாயக்கநேரி மலையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என காவல் துறையினர் பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.

திருப்பத்தூர்

மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கனேரி ஊராட்சியில் நூற் றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாது காப்புப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் மாதனூர் ஒன்றியத்துகுட்பட்ட 44 ஊராட்சிகளில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில், நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி எஸ்சி (பெண்கள்) பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், நாயக்கனேரி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு இதுவரை அங்கு வசித்து வரும் பழங்குடியினர் மற்றும் பொது பிரிவினருக்கு இடம் ஒடுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ஒரு சிலரே உள்ள எஸ்சி பிரிவினருக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டதை திரும்ப பெறக்கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு எஸ்சி பிரிவை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மனைவி இந்துமதி (21) என்பவர் கடந்த 22-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் ஏற்கப்பட்டது.

இதனால், அப்பகுதியில் உள்ள பழங்குடியினர் பெண் மற்றும் பழங்குடியினர் பொது ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட 9 ஊராட்சி வார்டு பதவிக்கு யாரும் போட்டியிடாமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக வேட்பு மனுதாக்கல் செய்த அதிமுக, திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை கடந்த 25-ம் தேதி வாபஸ் பெற் றனர்.

இதனால், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இந்துமதி என்பவர் மட்டுமே மனு அளித்துள்ளதால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

தற்போது, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மட்டுமே நாயக்கநேரி மலையைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதால் வருவாய் மற்றும் காவல் துறையினர் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வாக்களிக்க ஒரு சிலர் முன் வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் பொதுமக்களில் சிலர் தேர்தலில் வாக்களிக்க முன் வந்த ஒரு சிலரை நேற்று முன்தினம் தாக்கியதால் நாயக்கநேரியில் மேலும் பதற்றம் கூடியது.

பொதுமக்களால் தாக்கப்பட்ட நாயக்கநேரி மலையைச் சேர்ந்த வேல்முருகன், கமல், சித்ரா மற்றும் செல்வி ஆகிய 4 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சை பெற்று முழு உடல் தகுதியுடன் இருப்பதால், காவல் துறையினர் பாதுகாப்புடன் அவர்கள் 4 பேரும், ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இந்துமதி என்பவரும் இன்று நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தல் பாதுகாப்புப்பணியில் 1,617 காவலர்கள் ஈடுபடவுள்ளனர். இது தவிர 15-வது பட்டாலியன், 7-வது பட்டாலியனில் இருந்து காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப்பணியில் ஈடுபடவுள்ளனர்.

மாதனூர் மற்றும் ஆலங்காயம் ஒன்றியங்களில் 46 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாயக்கநேரி மலையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர். வாக்களிக்க வரும் மக்களை யார் தடுத்தாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். நாயக்கநேரி மலையில் சுமார் 3 ஆயிரம் வாக்குகள் உள்ளதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்.

இதற்கிடையே, தேர்தல் தொடர்பாக அங்கு நேற்று முன்தினம் ஏற்பட்ட பிரச்சினையால் 4 பேர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் சீக்குஜொனை பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் (42) என்பவர் வீட்டில் இருந்து 3 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்து அவரை கைது செய்துள்ளோம்’’ என்றார்.

இதற்கிடையே, திருப்பத்தூர் டிஆர்ஓ தங்கைய்யாபாண்டியன், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி மற்றும் வருவாய் துறையினர் நாயக்கநேரி மலையில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது குறித்து அங்கு நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x