Published : 09 Oct 2021 03:13 AM
Last Updated : 09 Oct 2021 03:13 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2,620 பதவிகளுக்கு - இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு : பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நியமனம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் இரண்டாம் கட்டமாக 2,620 பதவிகளுக்கு இன்று நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் 8,052 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 6-ம் தேதி முதற் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (அக்.9) நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தேர்தலில் வேலூர், அணைக்கட்டு மற்றும் கணியம்பாடி ஒன்றியங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதில், 5 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 50 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர்கள், 87 ஊராட்சி மன்ற தலைவர்கள், 697 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 839 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் 2,508 வேட்பாளர்கள் உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம் மற்றும் சோளிங்கர் ஒன்றியங்களில் உள்ள 757 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்கண்ட ஒன்றியங்களில் உள்ள 7 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 71 ஒன்றிய கவுன்சிலர்கள், 143 ஊராட்சி மன்ற தலைவர்கள், 929 ஊராட்சி வார்டு உறுப்பினர் என 1,150 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல்களத்தில் 3,377 பேர் உள்ளனர். மாவட்டத்தில் 172 வாக்குச்சாவடி கள் பதற்றமானவை என்று கண்ட றிந்துள்ளனர். இங்கு நுண் பார்வை யாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, ‘‘இரண்டாம் கட்ட தேர்தலில் 95 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாயம் ஊதியம் வழங்கப்படும்.

வரும் 12-ந் தேதி வாக்கு எண்ணும் பணியில் சுமார் 2,500 பேர் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குகள் நிறத்தின் வாரியாக பிரிக்கப்படும். இதற்கு தாமதமாகும். மின்னணு இயந்திரம் போல வேகமாக வாக்குகளை எண்ண முடியாது. எனவே, வாக்கு எண்ணிக்கை தொடங்கி இரவு 12 மணி வரையிலும் அல்லது மறுநாள் அதிகாலை வரையிலும் நடைபெற வாய்ப்புள்ளது’’ என தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 426 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு நடைபெற உள்ள 757 வாக்குச்சாவடிகளில் 66 மையங்களில் இணைய வழியாகவும், 61 மையங்களில் வீடியோ பதிவும், 630 மையங்களில் சி.சி.டிவி கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் மற்றும் ஆலங்காயம் ஒன்றியப்பகுதிகளில் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதில், 4 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 16 பேரும், 42 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து 41 இடங்களுக்கு 140 பேரும், 71 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் 70 இடங்களுக்கு 288 பேரும், 591 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 75 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், 516 பதவிகளுக்கு 1,723 பேர் என 631 இடங்களுக்கு 2,167 பேர் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

மாதனூர் மற்றும் ஆலங்காயம் ஒன்றியப்பகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக, 2 ஒன்றியங்களில் 385 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. தேர்தல் பணியில் 3,121 அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.

2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பால கிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று வாக்குப்பதிவுக்கு தேவை யான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்கள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இருந்து வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

5 மணிக்குள் வாக்களிக்கலாம்

இதுகுறித்து ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறும்போது, ‘‘2-ம் கட்ட தேர்தல் இன்று 2 ஒன்றியங்களில் நடைபெறவுள்ளது. 385 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. 5 மணிக்கு மேல் 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

எனவே, இதர வாக்காளர்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக தங்களது வாக்குச் சாவடி மையங்களுக்கு சென்று தங்களது வாக்குகளை செலுத்த லாம்’’ என்றார்.

ஆட்சியர் ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், வாணியம் பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x