Published : 08 Oct 2021 03:12 AM
Last Updated : 08 Oct 2021 03:12 AM

காணொலிக் காட்சி மூலம் ஓசூர், ஆத்தூர் அரசு மருத்துவமனை - ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார் :

மத்திய அரசு சார்பில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ரூ.1 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

கரோனா 2-வது அலையின் போது, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சையின்போது ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய அரசு நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நிறுவ நடவடிக்கை எடுத்தது.

சேலம் மாவட்டத்தில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டன. சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிமிடத்துக்கு 2 ஆயிரம் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையம் அமைக்கப்பட்டு ஏற்கெனவே திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், ஆத்தூர் மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பில் நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையம் நிறுவப்பட்டது. இதன் மூலம் 50 முதல் 60 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்ய முடியும். இந்த நிலையத்தை நேற்று காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதையொட்டி, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோட்டாட்சியர் சரண்யா தேவி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், எம்எல்ஏ, ஜெய சங்கரன், மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஈரோட்டில் செறிவூட்டும் இயந்திரம்

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில், பிரதமரின் பராமரிப்பு நிதியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திர சேவையை ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, ஈரோடு கிழக்கு எம்எல்ஏ திருமகன் ஈவெரா தொடங்கி வைத்தனர்.இரண்டு யூனிட்டில் நிமிடத்துக்கு 1000 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம் மூலம், ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

நிமிடத்திற்கு 1000 லிட்டர்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பி.எம்.கேர் மற்றும் எல்என்டி நிறுவனத்தின் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் ஒரு நிமிடத்தில் 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமை வகித்தார். தருமபுரி எம்பி செந்தில்குமார், எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உற்பத்தி மையத்தை திறந்து வைத்து எம்பி பேசுகையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.

இவ்விழாவில் மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லி, கண்காணிப்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூரில் பிரதமர் மோடி திறப்பு

ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் பி.எம். கேர் திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தை டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பங்கேற்றமாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறுகையில், ஓசூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள் மூலமாக 1 நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கும், என்றார்.

இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முரளி, வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x