

சேலம்: மகாளய அமாவாசை தினமான நேற்று கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சேலம் மாவட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால், நீர்நிலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாளில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் செய்து, வழிபடுவது வழக்கம். சேலம் மாவட்டத்தில் மேட்டூர், எடப்பாடி, பூலாம்பட்டி, கல்வடங்கம் பகுதிகளில் உள்ள ஆற்றுபடுகை பகுதிகளில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் வழங்குவர்.
நேற்று மகாளய அமாவாசை தினம் என்றபோதும் கரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக முக்கிய கோயில்கள், நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், நீர்நிலைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
நீர்நிலைகள் தடையால், சேலம் மாவட்டத்தில் விநாயகர் கோயில், சிற்றோடை, நந்தவனம், அணைக்கட்டு பகுதிகளில் பொதுமக்கள் திரளாக சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
வீடுகளில் முன்னோர்களின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து, தேங்காய், பூ, பழம், பலகாரம், காய்கறி, உணவு படைத்து, விரதமிருந்து, முன்னோர்களுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.