

நாகர்கோவில் அண்ணா விளை யாட்டரங்கத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆட்சியர் மா.அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல்மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஆட்சியர் கூறும்போது, “நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்க மைதானத்தில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்குவதற்கும், புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கும் விதமாகவும் பணிகள்மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது.
அதனடிப்படையில் இந்த விளையாட்டு மைதானத்தில் உள்ள 400 மீட்டர் தடகள ஓடுதளத்தில் செம்மண் நிரப்பி சர்வதேச அளவிலான செயற்கை ஓடுதளமாக மாற்றுதல், கால்பந்து மைதானத்தை புல்தரையாக மாற்றுதல், அண்ணா விளையாட்டு மைதானத்தின் வலதுபுறம் அமைந்துள்ள பார்வையாளர்கள் இருக்கைக்கு (காலரி) அருகில் காலியாக உள்ளஇடத்தில் புதிதாக ஒரு உள்விளையாட்டரங்கம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதைப்போல விளையாட்டரங்க கழிவுநீர் செல்லும் கால்வாயை நீர் தேங்காத வகையில் சமன் செய்து, கழிவு நீரை ஓடைக்கு திருப்பி விடவும், நீச்சல் குளம் செல்லும் பாதையில் வேகத்தடை அமைத்தல், தண்ணீர் தொட்டியின் மேற்கூரையை சரிசெய்தல், வீரர்,வீராங்கனைகளுக்கு புதிதாக கழிப்பிட மற்றும் உடை மாற்றும்அறை அமைத்தல், உடற்பயிற்சி மையத்தில் உபகரணங்களை சரிசெய்தல், பளுதூக்கும் பிரிவு அறையினை பழுதுபார்த்தல், புதிதாக நவீன பளுதூக்கும் உபகரணங்களை வாங்க நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
நாகர்கோவில் மகளிர் விளையாட்டு விடுதியில் சமையலறை கூடங்களை மேம்படுத்தவும், மாணவிகளை பார்க்க வரும் பெற்றோர்களுக்கு மகளிர் விளையாட்டு விடுதியில் கூரையுடன் கூடிய இருக்கை வசதி மற்றும் பொது கழிப்பறை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.