

போச்சம்பள்ளி அருகே சீட்டு நடத்தி பண மோசடி செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி, மத்தூர், அரசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் வாரச்சீட்டு நடத்தி, வீட்டு உபயோகப் பொருட்கள் தருவதாக சிலர் பணம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக பாரூர் காவல் நிலையத்தில், போச்சம்பள்ளி அடுத்த மேட்டுபுளியூரைச் சேர்ந்த ராமன் (35) என்பவர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் 2 பேர் மீண்டும் பணம் வசூலிக்க கிராம மக்களிடம் வந்தனர். தகவலறிந்த போலீஸார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (47), சாமல்பட்டி குமாரவேல் (29) எனத் தெரிந்தது. இவர்கள் 2 பேரும், வீட்டு உபயோகப் பொருட்கள் தருவதாகக் கூறி பணம் வசூல் செய்து பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீஸார், போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.