குளங்கள் உடைப்பை சீரமைக்கும் பணிக்கு - தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு பயிற்சி :
``மழைக்காலத்தில் குளங்களில் உடைப்பு ஏற்பட்டால் அதனை சீரமைக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 600 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டி ஏராளமானமனுக்கள் வருகின்றன. இதனால்,ேவலைவாய்ப்பை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு திறன்வளர்ப்பு பயிற்சிகளும் அளிக்கப் படுகின்றன.
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் 11,310 மனுக்கள் வந்தன. இதில், 8 ஆயிரத்து 411 மனுக்கள் ஏற்கப்பட்டன. 80 சதவீதம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 20 சதவீதம் மனுக்கள் சாலை வசதி, மின் விளக்கு வசதி, பசுமை வீடு போன்ற திட்டங்கள் கேட்டு வந்துள்ளன.
தூத்துக்குடி பக்கிள் ஓடை உட்பட மாவட்டம் முழுவதும் கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. நீர்நிலைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மழை நீர் தேங்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, தங்குமிடங்கள், உணவு சமைப்பதற்கான வசதிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. மாநகரப் பகுதிகளில் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற ஏற்பாடு செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் தாமிரபரணி வடிநில கோட்டத்தில் 53 குளங்களும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 525, ஊரக வளர்ச்சித் துறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களும் உள்ளன. குளங்களில் உடைப்பு ஏற்பட்டால், அதனை அந்தந்த பகுதி இளைஞர்கள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 600 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதால், தண்ணீர் கொள்ளளவு அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக முகாமில் 78ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஆனாலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் சதவீதம் குறைவாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
