வாக்குச்சாவடி மையங்களில் - கைபேசி பயன்படுத்தினால் வழக்கு பதிவு : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா எச்சரிக்கை

வாக்குச்சாவடி மையங்களில்  -  கைபேசி பயன்படுத்தினால் வழக்கு பதிவு :  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா எச்சரிக்கை
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையத்துக்குள் கைபேசியை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா எச்சரித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் 6-ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. 13 மாவட்ட கவுன்சிலர் பதவி, 124 ஒன்றிய கவுன்சிலர் பதவி, 205 ஊராட்சி மன்ற தலைவர் பதவி, 1,593 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 1,164 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 78 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 78 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர 1,008 வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையத்துக்கு வரும் முகவர்கள், வாக்காளர்கள் என யாரும் கை பேசிகளை கொண்டு வரக்கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை மீறி யாராவது வாக்குச்சாவடி மையத்துக்குள் கைபேசியை பயன்படுத்துவது தெரியவந்தால் அவர்களிடம் இருந்து கைபேசியை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர் கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் தவிர வேறு யாருமே கைபேசியை பயன்படுத்தக்கூடாது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in